திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை -  மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை :  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை - மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

Published on

திருச்சி பெல் நிறுவனத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘சித்த மருத்துவ முறையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பெல் நிறுவனத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் அங்கு ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: திருச்சி பெல் நிறுவனத்தில் 1980-ல்ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டு 2016 வரை உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது. உதிரி பாகங்கள், துணைக் கருவிகள் கிடைக்காததால் அந்த ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. அங்கு புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பது குறித்து அதன் நிர்வாக இயக்குநரிடம் கலந்து ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in