

திருநெல்வேலி அருகே கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஆக்சிஜன் உற்பத்திஆலையை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த2014-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு,எம்எல்ஏ அப்துல்வகாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் அமைச்சர் கூறியதாவது:
கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி கொண்டிருந்த ஆக்சிஜன்உற்பத்தி கூடம் கடந்த 2014-ம்ஆண்டிலிருந்து செயல்படவில்லை. தற்போதைய ஆக்சிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆலையை உடனடியாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலையில் தினமும் 2.5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆலையை மீண்டும் செயல்பட வைக்கத் தேவையான உதவிகளை அரசு வழங்கும். இதற்காக உதவிகளை செய்வதற்காக சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியை பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் நடந்து வருகிறது. விரைவில் சரி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.