

சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். ஆட்சியர் ராமன், எம்பி-க்கள் பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), சின்னராசு (நாமக்கல்), எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “முழு ஊரடங்கை முறையாக அமல்படுத்த வேண்டும். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சேலம் இரும்பாலையில் நடைபெற்று வரும் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணி மற்றும் இரும்பாலை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எடப்பாடி மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் கொள்கலன் வசதியை அதிகரிக்கச் செய்வது தொடர்பாகவும், அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.