

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1.25 கோடி நிதியுதவி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான நிதி உதவியினை விஐடி பல்கலைக்கழகம் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
வேலூர் விஐடி மற்றும் விஐடி சென்னை வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள், ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் விஐடி நிர்வாகம் சார்பில் என மொத்தம் ரூ.1.25 கோடி தொகை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான மின்னணு பணப் பரிவர்த்தனை பற்றுச்சீட்டு வேலூர்மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் விஐடி பல்கலைக்கழக பதிவாளர் கே.சத்திய நாராயணன் நேற்று மாலை வழங்கினார். அப்போது, விஐடி நிலையான ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் சுந்தர்ராஜன் உடனிருந்தார்.
கரோனா தொற்று தடுப்பு பணி மற்றும் சிகிச்சை அளிக்க வசதியாக விஐடி பல்கலைக்கழகம் அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலூர் விஐடி வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 1,000 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்துக்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கரோனா முதல் அலையின் போதும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.