காரவள்ளி சோதனைச் சாவடியில் கோட்டாட்சியர் ஆய்வு :

காரவள்ளி சோதனைச் சாவடியில் கோட்டாட்சியர் ஆய்வு :
Updated on
1 min read

சுற்றுலா பயணிகள் வருகையை கண்காணிக்க கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இப்பணிகளை நாமக்கல் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

கரோனா தொற்றின் 2-ம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், கார், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்டத்துக்குள் வருவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கொல்லிமலை சுற்றுலா தலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு காவல்துறை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை நாமக்கல் கோட்டாட்சியர் (பொ) ரமேஷ் ஆய்வு செய்தாா்.

அப்போது, “கொல்லிமலை யைச் சோ்ந்த உள்ளூர் வாகனங்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டும் வெளியில் சென்று வர அனுமதியளிக்க வேண்டும். வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என காவல் மற்றும் வனத்துறையினருக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, சேந்தமங்கலம் வட்டாட்டசியர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in