

பயணிகள் வருகை குறைவால், சேலம் விமான நிலையத்தில் இருந்து சேலம்-சென்னை இடையே இயக்கப்பட்ட விமான இயக்கம் இன்று (13-ம் தேதி) தொடங்கி 10 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ட்ரூ ஜெட் விமான நிறுவனம் சார்பில், சேலம்- சென்னை இடையே தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினசரி காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்படும் விமானம் காலை 9.35 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இந்நிலையில், கரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விமானங்களில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட விமான இயக்கம் தற்காலிகமாக 10 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா கூறியதாவது:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சென்னையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சேலம்-சென்னை இடையேயான விமானத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. 72 பேர் பயணம் செய்யும் விமானத்தில் நேற்று முன்தினம் (11-ம் தேதி) 17 பேர், இன்று (நேற்று) 11 பயணிகள் மட்டும் பயணம் செய்தனர். பயணிகள் வருகை குறைவால் சேலம்- சென்னை விமான சேவை இன்று (13-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.