

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணிக்கு தடுப்பூசி போடும்பணி தொடங்குகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முற்பகல் 11 மணிக்குதான் தடுப்பூசி போடும்பணி தொடங்குகிறது. தற்போது பகல் 12 மணி வரை பொதுமக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முற்பகல் 11 மணிக்கு தொடங்கும் தடுப்பூசி பணி முடிய பிற்பகல் 1 மணியையும் கடக்கிறது. அதன் பின் வீட்டுக்கு செல்லும் போது வழிமறித்து விசாரிக்கும் போலீஸாருக்கு பதில் சொல்லி செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் 30 நிமிடங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணிக்கே தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் காத்திருக்கும் பகுதியில் மின்விசிறி அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.