தூத்துக்குடி மாவட்டத்தில் - 8 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர் : சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் -  8 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர் :   சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கவலை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 சதவீதம் பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என, தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் (துடிசியா) சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமைவகித்தார். தூத்துக்குடி மாவட்டகரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தகுதியுள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி பகுதியில் 53 சதவீதம்மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 சதவீதம் மக்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு தொற்று வருவது குறைவாக உள்ளது. பாதிப்பும் குறைவாக உள்ளது. சமூக வலைதளங்களில் வரக்கூடிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆனால், ஒரு நாளைக்கு 900 நபர்கள் மட்டுமே ஊசி போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார்.

துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங்காலோன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, மாநகராட்சி நல அலுவலர் வித்யா கலந்து கொண்டனர்.

சமூக வலைதளங்களில் வரக்கூடிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in