பெருந்துறையில் தொழிற்சாலைகள் இயங்குவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் : நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் தொழிற்சாலைகள் இயங்குவதால் கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி மனு வழங்கினார். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள், இதர மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் சிப்காட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பெருந்துறை போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். தொழிலாளர்கள் வீதிகள், சாலைகள், கடைகளில் சுற்றித்திரிவதால் கரோனா அச்சம் ஏற்படுகிறது. அரசு அறிவிப்பில், அத்தியாவசியத் தேவைக்கான தொழிற்சாலைகள் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சிப்காட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, காஸ் பில்லிங் தொழிற்சாலை போன்றவற்றைத் தவிர மற்ற தொழிற்சாலைகளை ஊரடங்குக்குப்பின்னர் இயக்கலாம். இதனால், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். அரசு சார்பில் நிவாரணமும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
