

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு மாதத்துக்குப் பின்னர், விநாடிக்கு 398 கனஅடியாக நீர் குறைந்ததால், அணையின் நீர் மட்டம் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.
கோடைக்காலம் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்திருந்தது. இந்நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது, அணையில் 97.55 அடி நீர் மட்டம் இருந்த நிலையில், அணைக்கு நீர் வரத்து, விநாடிக்கு 1,499 கனஅடியாக அதிகரித்தது. குடிநீருக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
நீர் வரத்து அதிகரித்ததால், அணையின் நீர் மட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 97.94 அடியாகவும், நீர் இருப்பு 62.20 டிஎம்சி-யாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 838 கனஅடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக, விநாடிக்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பின்னர் அணைக்கு வரும் நீரின் அளவில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 398 கனஅடி மட்டுமே நீர் வரத்து இருந்தது. குடிநீருக்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவான 800 கனஅடியை விட, நீர் வரத்து குறைந்ததால், அணையின் நீர்மட்டம் தற்போது சரியத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 97.89 அடியாகவும், நீர் இருப்பு 62.14 டிஎம்சி-யாகவும் இருந்தது.