

கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் திருச்சியில் உள்ள படைக்கலன் தொழிற்சாலைகளை மே 24-ம் தேதி வரை மூட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருச்சி நவல்பட்டு அருகே துப்பாக்கித் தொழிற்சாலை மற்றும் ஹை எனர்ஜி புரெஜக்டைல் தொழிற்சாலை ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனங்களின் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சந்திரசேகரன், இரணியன் ஆகியோர் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
அத்தியாவசிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களாக இந்த இரு நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த இரு தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் மே 24-ம் தேதி வரை தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு உரிய வழிகாட்டு உத்தரவையும் அறிவுறுத்தலையும் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.