

ரெம்டெசிவிர் மருந்து வழங்கக் கோரி திருச்சியில் 3-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி தொடங்கியது.
இங்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், முதலில் வரும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மருந்து வாங்க வந்தவர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், 3-வது நாளாக நேற்றும் 200-க்கும் அதிகமானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக காத்திருந்தனர். ஆனால், நேற்றும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், டோக்கன் கிடைக்காதவர்களும், மருந்து கட்டாயம் தேவை என்ற நிலையில் இருந்தவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்களில் பலர் தங்களது நிலைமையை ஆவேசமாக எடுத்துக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மருந்து கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர்களில் சிலர் கூறும்போது, ‘‘மாவட்டந்தோறும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யவும், அதுவரை திருச்சியில் கூடுதல் எண்ணிக்கையில் மருந்தை வரவழைத்து விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.