

தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:
மாவட்டத்தில், கரோனா ஊரடங்கின் போதும் தொழிற் சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும். மேலும், தொழிற் நிறுவனங்கள் சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் விவரங்கள் மற்றும் செல்போன் விவரத்தினை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலை நுழைவு வாயில்களில் கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றினை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், தொழிற்சாலை நிறுவனங்களின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளின் இருப்புநிலை அறிந்து தங்களது பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், ஏடிஎஸ்பி ராஜூ, தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சபீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.