

திருச்சியில் காலாவதியான ரெம் டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்ய தர்ஷினி விளக்கமளித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி தொடங்கியது.
ஞாயிறன்று மருந்து விற்பனை நடைபெறாத நிலையில், நேற்று ரெம்டெசிவிர் மருந்து வாங்கு வதற்காக 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. அதிகம் பேர் மருந்து கேட்கும் நிலையில், தினமும் குறைந்த எண்ணிக்கையில் மருந்து விற்பது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் கேட்ட போது அவர் கூறியது: வரையறுக்கப்பட்ட அளவே ரெம்டெசிவிர் மருந்து வரப் பெற்றுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு மற்றும் சுகாதாரத் துறை கூறியுள்ள வழிகாட்டுதலின்படியே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், மே 8-ம் தேதி 184 தொகுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. அரசின் வழி காட்டுதலுக்கு உட்படாத, சரியான காரணம் இல்லாத 18 பேருக்கு மருந்து வழங்கப்படவில்லை.
300 தொகுப்பு மருந்துகள் நேற்று வரப்பெற்றுள்ளன. ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஒரு வாரம் கவனித்துவிட்டு, எவ்வளவு தேவைப்படும் என்று கணித்து, தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்புமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்துகள் 3 மாதங்களில் காலாவதியாகிவிடும் என்று முதலில் கூறப் பட்டிருந்தது. ஆனால், அதன்பின், அந்த மருந்தை 12 மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலம் காலாவதி தேதியை மாற்றி புதிய வில்லை ஒட்டப்பட்டது. காலாவதியான மருந்து விற்பனை செய்யப்படவில்லை.
ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்க்கெட்டை இடம் மாற்ற நடவடிக்கை
காந்தி மார்க்கெட் மொத்த விற்பனையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.