கர்ப்பிணி மருத்துவர், செவிலியர்கள், பெண் எஸ்.ஐ உள்ளிட்ட - முன்களப் பணியாளர்கள் கரோனாவால் உயிரிழப்பு : மருத்துவக்கல்லூரி முதல்வர் உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று

மருத்துவர் சண்முகப்பிரியா
மருத்துவர் சண்முகப்பிரியா
Updated on
2 min read

தமிழகத்தில் கர்ப்பிணி மருத்துவர், 2 செவிலியர்கள், பெண் எஸ்.ஐ. உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா(31), சின்னமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.

அண்மையில் மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். கர்ப்பிணி என்பதால் பணிக்குச் செல்ல வேண்டாம் என்று இவரது குடும்பத்தினர் அறிவுறுத்தினர். இருப்பினும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் கரோனா காலத்திலும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இவருக்கு 3 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அதேபோன்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேபேன்று வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த செவிலியரான பிரேமா (52). அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் கரோனா சிறப்பு வார்டில் பணியமர்த்தப்பட்டார்.

அங்கு இரவு, பகல் பராமல் கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சலும், இருமல், சளி தொந்தரவும் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பிரேமா தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி செவிலியர் பிரேமா நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் லட்சுமி(45). இவர் மதுரை 6-வது பட்டாலியன் பிரிவில் எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் வணிக வரித் துறை அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மதுரை ஆத்திகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தேர்தலையொட்டி மாற்றுப் பணியாக விருதுநகர் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இவரது உடலுக்கு காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கேயே சிகிச்சை பெறுகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் நம்பிராஜன், மூத்த செய்தியாளர் சரவணன் ஆகியோரும் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் முன்களப் பணியாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in