

ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் தேதி உலக அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ‘எங்க ஊரு மியூசியம்’ என்றதலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் பற்றி 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும். அந்த வீடியோவில் மாணவர்கள் தங்களின்பெயர், வகுப்பு, பள்ளியின் பெயரை சொல்ல வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம்.
9, 10, 11 ,12-ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ‘தமிழக அருங்காட்சியகங்கள்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிநடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகங்கள் பற்றி 3 பக்கங்களுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி அதை தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். கட்டுரையில் மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். வீடியோ மற்றும் கட்டுரைகளை வருகிற 15-ம் தேதிக்குள் govt.museumtvl@Gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளலாம் என திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.