

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற 7 பேரை, கரோனாஅச்சம் காரணமாக இலங்கை கடற்படையினர் கைது செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி கடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக ஏற்கெனவே 12 பேரை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஆனால், தற்போது கடத்தலில் பிடிபடுபவர்களை, கரோனா அச்சம் காரணமாக இலங்கை அரசுகைது செய்வதில்லை. கடுமையாக எச்சரித்து மட்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
கடந்த மாதம் 27, 28 மற்றும் 29-ம்தேதிகளில் பீடி இலை, விரளிமஞ்சள் பொருட்களை இலங்கைக்கு கடத்திச் சென்ற 17 பேர் கைதுசெய்யப்படாமல், தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாரில் இருந்து நாட்டுப்படகில் 7 பேர் இலங்கைக்கு கஞ்சாகடத்திச் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, 235 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக அந்த நபர்களை கைது செய்து நாட்டுக்குள் அழைத்து வரவேண்டாம் என்றும், போதை பொருட்களை எரித்துவிடுமாறும் இலங்கை அரசுஅறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த கும்பலைஎச்சரித்து அதே படகில் மீண்டும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளனர். கஞ்சா கடத்திச் சென்ற நபர்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.