வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உதவிகளைக் கொண்டுவரும் பாதுகாப்பு துறை :

வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உதவிகளைக் கொண்டுவரும் பாதுகாப்பு துறை :
Updated on
1 min read

இந்தியக் கப்பற்படையின் கப்பல்கள், விமானப்படையின் விமானங்கள் மூலம் அவசர மருத்துவ உதவிகள் பெகரைன், குவைத், கத்தார் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக அதிகரித்துவருகிறது. இதனால் ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றில் தொடர்ந்து பற்றாக்குறை இருந்துவருகிறது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க பெகரைன், குவைத், கத்தார் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நாடுகள் வழங்கும்

ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை கப்பற்படையின் கப்பல்கள், விமானப்படையின் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் கரோனா பரவல் அதிகமுள்ள இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

உள்நாட்டு அவசர போக்குவரத்துகள் மட்டுமல்லாமல் ஜெர்மனி, சிங்கப்பூர், அரபு நாடுகள், ஓமன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் மருத்துவ உதவிகளைக் கொண்டுவருவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

லட்சதீபம் போன்ற தீபகற்ப பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் கப்பற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் டிஆர்டிஓ சார்பாக புதுடெல்லி, அகமதாபாத், பாட்னா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாரணாசியில் ஒரு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ மனைகளில் பாதுகாப்புப் படையின் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் 24 மணி நேரமும் கரோனா மருத்துவ சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேலானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 2 கோடி 14 லட்சத்தைக் கடந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது 36 லட்சம் பேருக்கு தொற்று இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in