மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி - நாளை முதல் 2 வாரம் முழு ஊரடங்கு : பேருந்து, ஆட்டோக்கள் இயங்காது டாஸ்மாக்கை மூட ஸ்டாலின் உத்தரவு

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி -  நாளை முதல் 2 வாரம் முழு ஊரடங்கு :  பேருந்து, ஆட்டோக்கள் இயங்காது  டாஸ்மாக்கை மூட ஸ்டாலின் உத்தரவு
Updated on
3 min read

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப் படுத்த நாளை (மே 10) காலை 4 மணி முதல் 24-ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். இந்த நாட்களில் காய்கறி, மளிகை, இறைச்சி, தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை செயல்படும். பேருந்து, ஆட்டோ இயக்கம் உள்ளிட்ட மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால் தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் மே 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங் களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊர டங்கு அமல்படுத்தப்படும். அப்போது மேற்கொள்ளப்படும் பணிகள்:

l சர்வதேச விமானப் போக்குவரத்துக் கான தடை தொடரும். வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம் வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில், விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

l வணிக வளாகங்கள் இயங்க தடை தொடரும். தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

l மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விநியோகம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். மற்ற பொருட்கள் விநியோகம் கூடாது.

l மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

l முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

l தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே. உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

l தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்கள், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

l திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் வரையும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் வரையும் பங்கேற்க அனுமதி.

l அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் இயங்க தடை.

l கோயம்பேடு வணிக வளாகம், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை.

அரசுத் துறைகள்

l அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

l அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. தினமும் நடக்கும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, ஊழியர்கள் மூலம் நடத்தலாம். குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

l சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

l மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

l திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

l பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து, விவசாய விளைபொருட்கள், ஆக்சிஜன், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

l வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம்.

l உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், பகல் 12 முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்களுக்கு அனுமதி இல்லை.

அம்மா உணவகம் இயங்கும்

l ரேஷன் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரை செயல்படும். தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கான சேவை வழங்குபவர்கள், தொடர்புடைய நிறுவனங்களின் அடையாள அட்டை, ஆவணங்களுடன் சென்று வரலாம்.

l தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம். கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது, சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி உண்டு.

l பெட்ரோல், டீசல் பங்க்குகள், வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அரசு அதிகாரிகளும் மருத்துவ நிபு ணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். ஊரடங்கு போடாமல் கரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகிறது.

இதனால், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், ஊரடங்கு அறிவிக்கவில்லை என்றால், கரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமானதாக ஆகிவிடும். எனவே, இந்த 14 நாட்களும் மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கிருமி நாசினியை பயன்படுத்துங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். கரோனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கடைகள் திறந்திருக்கும்

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக மே 8, 9 ஆகிய இரு தினங்களில் அனைத்து கடைகள், நிறுவனங்கள் வழக்கம்போல காலை 6 முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து கடைகளும் இன்று இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in