

நல வாரியங்களில் தொழிலாளர் பதிவு அறிவிப்பை கட்டாயமாக்க வேண்டும் என, சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்புத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் கூட்டம், நேற்று முன்தினம் சிங்காநல்லூர் எச்.எம்.எஸ் அலுவலகத்தில் நடந்தது. எல்பிஎப் பொதுச் செயலாளர் வெ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறப்பட்டது.
மேலும், நடைமுறையில் உள்ள 17 தொழில் வாரியங்களில் பெயர் பதிவு செய்யாதோர் 1.30 கோடி பேரும், பதிவை தவற விட்டோர் 50 லட்சம் பேரும் உள்ளனர். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் கட்டாயம் நல வாரியங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்புப் பதிவை கட்டாயமாக்க வேண்டும். நல வாரியங்களில் பதிவு செய்தோர், புதுப்பிக்காத நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிப்பதற்கு அரசு கவனம் செலுத்தவில்லை.
கரோனா காலத்தை கணக்கில் கொண்டு, நல வாரியத்தில் புதுப்பித்தல் விடுபட்டுப் போனாலும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்ற சிறப்பு அரசாணை வெளியிட்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்வதை கைவிட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளி ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்ற நிபந்தனைகளை ரத்து செய்து, 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த குறிப்பிட்ட ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு வழங்கவில்லை.
எனவே, கடந்த 2011-ம் ஆண்டு வரை நிபந்தனைகள் காரணமாக ஓய்வூதியம் மறுக்கப்பட்டவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். கரோனா காலத்தை முன்னிட்டு நல வாரிய பதிவு புதுப்பித்தல் பணி கணினி மூலம் நடந்து வருகிறது. இதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளன. எனவே, பயோ-மெட்ரிக் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகேசன், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், கோவை மண்டல கட்டுமானத் தொழிலாளர் எச்எம்எஸ் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் தலைவர் சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.