

கிருஷ்ணகிரி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் வெலகஹஅள்ளி செல்லும் சாலையில் உள்ளது ஆலப்பட்டி காலனி. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆலப்பட்டி ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வரவில்லை. மேலும், ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்தும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியுற்றனர்.
அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், விரக்தி அடைந்த ஆலப்பட்டி காலனி மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை ஆலப்பட்டி காலனியில் திடீரென்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மறியலை கைவிட மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் தரன் மற்றும் அலுவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து, தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் 2 நாட்களில் வழங்கப்படும்.
இதேபோல புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.