

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவலுக்கு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் கரோனா மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் சிகிச்சை பலனில்லாமல் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கரோனா நோய் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிந்து பல்வேறு இணை நோய்களால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் சிறுநீரக கோளாறு, வயது மூப்பு, இருதய நோய் உள்ளிட்டவையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேர், பரிசோதனைக்கு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
கரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பாக, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் விபத்து, கொலை உள்ளிட்ட நிகழ்வுகள் என சராசரியாக நாள்தோறும் 15 பேர் இறப்பு பதிவாகும். தற்போது கரோனா மற்றும் இணை நோய்களால் உயிரிழப்புகள் கூடுதலாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், தருமபுரி, ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணிபுரியும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். அவ்வாறு வரும் அனைவருக்கும் சிகிச்சை யளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் நோயாளிகள் இங்கு பரிந்துரை செய்கின்றனர்.
கடந்த வாரத்தில் நாள்தோறும் 40 பேர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 140 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், நாள்தோறும் கரோனாவால் ஓரிரு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம். கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உட்பட அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.