

சென்னையை தொடர்ந்து திருநெல்வேலியில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 700 பேர் வரை கரோனா தொற்றால்பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலானோர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்திலிருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை, மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா நேற்று தொடங்கி வைத்தார். அதிக நெரிசல் மிகுந்த, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க உதவியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர் பிரத்யேக ட்ரோன்களை தயாரித்துள்ளனர்.
பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த ட்ரோன், 16 லிட்டர் கிருமிநாசினியுடன் பறந்து சென்று, அதனை தெளிக்கும் திறன் கொண்டது. சாலை மார்க்கமாக வாகனங்களில் தெளிக்கப்படும் கிருமி நாசினியை விட ட்ரோன் மூலம் வான் வழியாக தெளிக்கப்படும் கிருமிநாசினியால் அதிக பயனுண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ட்ரோன் 6 நிமிடத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு கிருமி நாசினி தெளிக்கும் திறன்கொண்டது. ஏற்கெனவே சென்னையில் 15 நாட்களுக்கு இந்த ட்ரோன்பயன்படுத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக, திருநெல்வேலியில் என்ஜிஓ காலனி பகுதியில் இந்த ட்ரோன் பயன்பாடு நேற்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளித்து வருகின்றன. தற்போதைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எனவே நிலைமையை சமாளித்துவிடலாம் என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.