

போளூரில் ஓய்வு பெற்ற மருத்துவர் வீட்டில் 15 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டைவர்ஷன் சாலையில் வசிப்பவர் மருத்துவர் சிவனேசன்(77). அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், தனது வீட்டிலேயே கிளீனிக் நடத்தி வருகிறார். இவர், தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அவரது வீடு பூட்டியிருந்தது.
இந்நிலையில் அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதையடுத்து சிவனேசன் வீடு திரும்பினார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டின் பல்வேறு இடங்களில் வைத்திருந்த 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் காணவில்லை.
இது குறித்து போளூர் காவல் நிலையத்தில் சிவனேசன் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.