

தமிழகத்தில் புதிய அமைச்சரவையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு பிரதிநிதித்தும் அளிக்கப்படாதது இரு மாவட்டங்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் புதியஆட்சி அமைந்துள்ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியல்நேற்று மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அப்பட்டியலில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்ததிமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அருகிலுள்ள தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தலா இருவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
ராதாபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் மு.அப்பாவு, பாளையங்கோட்டையில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் அப்துல்வகாப் ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ராதாபுரம் தொகுதியிலிருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட பணிகளை கருத்தில் கொண்டு அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் சங்கரன்கோவில் தொகுதியில் புதுமுகமாக போட்டியிட்டு, அதிமுக அமைச்சர் ராஜலெட்சுமியை தோற்கடித்த ராஜாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால் அவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியின்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து டிபிஎம் மைதீன்கான், பூங்கோதை ஆலடி அருணா ஆகிய இருவருக்கு அமைச்சர் பொறுப்பும், ஆவுடையப்பனுக்கு சட்டப்பேரவை தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இதுபோல், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சரவையில் கருப்பசாமி, ராஜலட்சுமி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய புதிய அமைச்சரவையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு பிரதிநிதித்தும் அளிக்கப்படாதது அக்கட்சியினருக்கு மட்டுமின்றி, இம்மாவட்ட மக்களுக்கும் ஏமாற்றமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் திமுக முன்னோடிகள் பலரும் வெற்றிபெற்று மீண்டும் அமைச்சர் பொறுப்புகளை பெற்றுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆவுடையப்பன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடிஅருணா ஆகிய முன்னோடிகள் தோல்வியை தழுவியதால் அமைச்சர் பதவி வாய்ப்பும் அப்போதே மங்கிப்போய்விட்டதாக திமுக முன்னோடிகள் தெரிவிக்கிறார்கள்.