

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள ஆத்மாவில், கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு என்று தனியாக எரியூட்டும் தகனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகர் பகுதியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை யடுத்து மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நான்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த உதவி ஆணையாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடைகள் வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் கரோனா வழிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு அபராதம் விதித்து, அந்த ஆறு கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை கொங்கலம்மன் கோயில் வீதியில் மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு டீ கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
கரோனா பரவலைக் கண்டறிய தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் தொற்றின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. 60 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள ஆத்மாவில், கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு என்று தனியாக எரியூட்டும் தகனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணி முடிவடைந்து தயாராகிவிடும். கரோனா தடுப்பூசி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளது, என்றார்.