

திருநெல்வேலி மாவட்டத்தில் பரிசோதனை அடிப்படையில் கரோனா நோயாளிகளை3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள காந்திமதி அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 1,240 படுக்கைகள் உள்ளன. அதில், 800 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி இருக்கிறது.
அங்கு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 19 கிலோலிட்டர் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. இதுபோல், பல்நோக்கு மருத்துவமனையில் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 13 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றுக்கும் தேவையான ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து, அவர்களது நோயின் தாக்கம் அடிப்படையில், பச்சை, மஞ்சள், சிவப்புஎன்று 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கரோனா அறிகுறியுள்ளவர்கள் காந்திமதி பள்ளிக்கு முதலில் வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவு அடிப்படையில், லேசான பாதிப்பு உள்ளவர்கள் பச்சை என்று அடையாளப்படுத்தப்பட்டு அவர்களதுவீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்படும். தேவையான மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்படும்.
வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாதவர்களும், ஓரளவுக்கு பாதிப்பு உள்ளவர்களும் மஞ்சள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, கூடங்குளம் அரசு மருத்துவமனை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை, பத்தமடை சிவானந்தா மருத்துவமனை ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
பாதிப்பு அதிகம் இருப்போர்சிவப்பு என்று அடையாளப்படுத்தப்பட்டு, நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். கரோனா பாதித்தவுடன் யாரையும் நேரடியாக திருநெல்வேலி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கமாட்டோம். நோயின் தீவிரம் குறித்து பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர். பரிசோதனை மையமான காந்திமதி பள்ளியிலிருந்து முகாம்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தினமும் 3,500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் உள்ளன. இங்குள்ள 55 வார்டுகளிலும் 5 வார்டுக்கு ஒரு குழு என்று 11 குழுக்கள் கண்காணிப்பு பணியைமேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக் குழுவில் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை சார்பில் பணியாளர்கள் இருப்பார்கள்.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் 100 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியிருக்கிறது. கூடங்குளம், முனைஞ்சிப்பட்டி, பணகுடி, வள்ளியூர் பகுதிகளிலும் கரோனா மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை கண்காணிக்க ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
மே 6 முதல் புதிய ஊரடங்குவிதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து கரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.