

எதிர்கட்சி வரிசையில் இருந்து மக்கள் சேவையை அதிமுக தொடர்ந்து செய்யும் என சேலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்..
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ள முன்னாள் முதல்வர் பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது:
மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகளவு உள்ளது என்பதையும் தேர்தல் முடிவு வெளிகாட்டியுள்ளது. அரசை வழி நடத்துக்கின்ற எதிர்கட்சி வரிசையில் இருந்து மக்கள் சேவையை அதிமுக தொடர்ந்து செய்யும். தேர்தலில் 5 முனை போட்டியிருந்த போதிலும், 3 கட்சிகளை மக்கள் புறக்கணித்து உள்ளனர். திமுக-வை ஆளுங்கட்சி யாகவும், அதிமுக-வை வழிநடத்தும் கட்சியாக பொது மக்கள் தேர்வு செய்துள்ளனர். எதிர்கட்சித் தலைவராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்யும். தற்போதைய முதல்பணி கரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிமுக-அமமுக இணைப்பு தொடர்பாக கட்சி தலைமையே முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறும்போது, “அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வியை எதிர்கொள்ள கூடியமன தைரியம், அதிமுக-வில் உள்ள அனைவருக்கும் உள்ளது. எதிர்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ-க்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள்” என்றார்.