தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளில் - தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது : மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளில் -  தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது :  மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 13 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கூடுதலாக 7 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 10 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்க், அதாவது 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ளது. இதனால் நமக்கு தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பில் உள்ளது.

அதேபோல, ஒவ்வொரு நாளும் சுகாதாரத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி முதல்வர், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தேவை அடிப்படையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 4,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 2,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 சதவீதத்துக்கும் மேலான படுக்கைகள் காலியாக உள்ளன.

மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் தேசிய அளவில் கரோனா தொற்று பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு வரக்கூடிய தொற்றாளர்களுக்கு தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அதிகரித்து தரப்படும். மேலும், உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவர் தடுப்பு மருந்து தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கும் தேவையான அளவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.மருததுரை, நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம், தஞ்சாவூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in