

மேற்கு வங்கத்தில் நீண்டகாலம் ஆட்சி செய்த இடதுசாரிகளுக்கு இந்த தேர்தலில் ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. மேற்கு வங்க சட்டப் பேரவையில் 294 இடங்கள் உள்ளன. இதில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் 292 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி வென்றுள்ளது.
சஞ்சுக்தா மோர்ச்சா என்ற பெயரில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன.
ஐஎஸ்எஃப் வேட்பாளர் நவ்ஷாத் சித்திக், பங்கார் தொகுதியில் வெற்றி பெற்றார். மீதமுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில் சுதந்திரம் பெற்றது முதல், பேரவையில் இடம்பெற்று வந்த இடதுசாரி வேட்பாளர்கள் இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினராக உள்ள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “தேர்தலில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பாஜக பயன்படுத்தியது. அதே நேரத்தில் எங்களால் வாக்குகளை ஒருங்கிணைத்துப் பெற முடியவில்லை. அதே நேரத்தில் மேற்கு வங்க மக்கள் மதவாதம் என்ற கொள்கையை நிராகரித்துள்ளனர்.
பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் எங்கள் ஆதரவாளர்கள் சிலர் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். எங்கள் தோல்வி குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்” என்றார்.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்ஜன் சவுத்ரி கூறும்போது, “முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்பதை ஆரம்பம் முதலே பகிரங்கப்படுத்தி வந்தார் முதல்வர் மம்தா. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் மதவாத கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்பதை மேற்கு வங்க மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க நாங்கள் தவறிவிட்டோம். அதுதான் எங்கள் தோல்விக்குக் காரணமாக அமைந்தது” என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தியது. ஆனால் அதை புரிந்துகொண்ட மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அதேநேரத்தில் மம்தாவுக்கு அவர்கள் ஆதரவு தந்துள்ளனர்” என்றார்.