

தமிழகத்தில் புதிதாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளநிலையில் தமாகா இடம் பெற்றுள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் நலன், இயக்க நலன் கருதி தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்படுவது நமது கடமை. அதை தமாகா முறையாகச் செய்யும்.
எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்றகூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
மேலும், புதிதாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் தமாகா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.