

நெற்பயிரில் துத்தநாகச் சத்து மேலாண்மை குறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது நெற்பயிர் வளர்ச்சிக்கு துத்தநாகச் சத்து மிகவும் முக்கியமானது. துத்தநாகச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் நடவு செய்த 2 முதல் 4 வாரங்களில் தென்படும் இலையின் அடிப்பக்கத்தில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். மேலும் இலையின் நடுப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறமாக காணப்படும். புள்ளிகள் பெரிதாகி அவை ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்பு காணப்படும். துத்தநாக சத்து பற்றாக்குறை மிக அதிகமான நிலையில் பயிர் காய்ந்துவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலங்களிலும், களர் - உவர் நிலங்களிலும் நன்செய் நிலங்களிலும் காணப்படும். தழை மற்றும் மணி சத்துக்கள் அதிகமாக இடுவதாலும் போதுமான அளவு குப்பைச் சத்து இடாத நிலங்களிலும் துத்தநாக சத்து குறைபாடு காணப்படும்.
துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நடவிற்கு அல்லது விதைப்பிற்கு நுண்ணூட்ட உரத்தை தேவையான அளவு மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். வளர்ச்சிப் பருவத்தில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திட 0.5 சதம் துத்தநாக சல்பேட் கரைசலைத் தெளிக்கவேண்டும். எனவே, நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாய பெருமக்கள் அனைவரும் தெரிவிக்கப்பட்டுள்ள மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.