

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு விதிப்படி, வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும், அந்தந்த தொகுதிக்குப்பட்ட அலுவலகங்களில் 90 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு அவை அங்கிருந்து அனுப்பி வைக்கப் படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதன்படி கிருஷ்ணகிரி தொகு தியில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ஓசூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையிலும், வேப்பனப்பள்ளி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊத்தங்கரை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பர்கூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், தளி தொகுதி வாக்கு இயந்திரங்கள், தேன்கனிகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் வைப்பதற்காக, லாரிகளில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. இப்பணி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மேற்பார்வையில் நடந்தது.