

தேர்தலின்போது திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தனது வெற்றிக்கு பெரிதும் கைக் கொடுக்கும் என்று கருதி, திமுக வேட்பாளரை வெளியூர்காரர் என குற்றம் சுமத்தி செய்த பிரச்சாரம் அவருக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
திருச்சி 1-வது சட்டப்பேரவைத் தொகுதி, தொகுதி மறு சீரமைப்பில் திருச்சி கிழக்கு தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மனோகரனும், 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜனும் வெற்றி பெற்றனர். இதில், மனோகரன் அரசு தலைமைக் கொறடாவாகவும், வெல்ல மண்டி நடராஜன் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருந்தனர்.
இந்நிலையில், இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் வெல்லமண்டி நடராஜனே போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தைச் சேர்ந்த இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார்.
இருவரும் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். அப்போது, ‘‘திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வெளியூர்காரர் என்பதால், அவர் வெற்றி பெற்றால், அவரை பார்க்கவே முடியாது. ஆனால், நானோ உள்ளூர்க்காரர், என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எளிதில் சந்திக்கலாம். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்’’ என்று கூறி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரம் செய்தார். இது ஓரளவுக்கு கை கொடுக்கும் என அவர் நம்பியிருந்தார்.
ஆனாலும், வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜன் தோல்வியடைந்தார். அதிமுகவில் தோல்வியடைந்த அமைச்சர்களில் கே.பாண்டியராஜனுக்கு(55,275 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி) அடுத்தபடியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர் வெல்ல மண்டி நடராஜன் என்பது குறிப் பிடத்தக்கது.
இவரது தோல்விக்கான கார ணம் குறித்து அரசியல் கட்சியினர் கூறியது:
அரசின் நலத் திட்டங்களைத் தாண்டி, தன்னை அடையாளப் படுத்தும் வகையில் தொகுதிக்கோ, மாவட்டத்துக்கோ எந்தத் திட்டத்தையும் வெல்லமண்டி நடராஜன் செய்யவில்லை. கட்சியினர் சிலரைத் தவிர்த்து பெரும்பாலானோரிடம் இணக்கமாக இல்லை. தொகுதி மக்களிடத்தில் நெருக்கம் இல்லை. எனவேதான், திமுக வேட்பாளர் வெளியூர்காரர் என்றும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசரைப்போல இவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியில் இருக்க மாட்டார் என்றும் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ஆனால், அவரது இந்த பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடவில்லை.
அதேசமயம், புதுமுகமாக இருந்தாலும்கட்சியின் பிரச்சார உத்திகள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் முழு ஒத்துழைப்பு ஆகியவற்றால் திமுக வேட்பாளர் எஸ்.இனிகோ இருதயராஜ் எளிதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றனர்.