

நாகப்பட்டினம்: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் வெற்றி பெற முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது.
அதுபோல, மேற்குவங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி, வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பான வெற்றியை பெற்று, இடதுசாரி கூட்டணி ஆட்சியை கூடுதல் பலத்துடன் தக்க வைத்திருக்கிறது.
தமிழர்கள், வங்காளிகள், மலையாளிகள் ஒரு அரசியல் பாடத்தை நாட்டுக்கு நடத்தி இருக்கிறார்கள். அந்தவகையில் தேர்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எழுச்சியை தேசிய அளவில் கட்டமைக்க, திமுக சார்பில் முன்முயற்சிகளை மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். அவர் தலைமையிலான புதிய ஆட்சி பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.