

ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணியுடன் மூடப்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மே தினம் என்பதாலும், இன்று (ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், நேற்று முன் தினம் மாலை முதல், இரவு வரை வழக்கத்தை விட அதிக அளவு மதுபானங்கள் விற்பனையானது. சாதாரண நாட்களில் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனையான நிலையில், நேற்று முன் தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.10 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 350-க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.