

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கரோனா தற்காலிக சிறப்பு சிகிச்சை மையத்துக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் படுக்கை, மெத்தை, போர்வை, முகக் கவசங்களை வழங்கியுள்ளன.
சேலம் மாநகராட்சி சார்பில் தொங்கும்பூங்கா பல்நோக்கு அரங்கம், மணியனூர் அரசு சட்டக்கல்லூரி, கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கரோனா தொற்றால் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக கட்டில்கள், தலையணைகள், மெத்தைகள் மற்றும் முகக் கவசங்களை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் உள்ள கரோனா தற்காலிக சிகிச்சை சிறப்பு மையத்துக்கு, சேவாபாரதி சேலம் மையம் சார்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ரூ.25 லட்சம் மதிப்பில் 250 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்க கடிதம் வழங்கினர்.
அதேபோல, திரிவேணி எர்த் மூவர்ஸ் சார்பில் ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 250 மதிப்பில் 50 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் போர்வைகளும், ஆடிட்டர்ஸ் ஆஃப் சேலம் சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 25 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் போர்வைகளை வழங்கினர்.
தங்கவேல் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் 5,000 முகக்கவசங்கள், ஸ்வெட்டர்ஸ் இந்தியா சார்பில் 4,000 முகக்கவசங்கள், போத்தீஸ் நிறுவனம் சார்பில் 3,000 முகக்கவசங்கள்; சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 1,000 முகக்கவசங்கள் வழங்க கடிதங்கள் வழங்கினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.