

ஈரோட்டில் கோழிப்பண்ணை நிறுவனம் நடத்தி ரூ.91 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ளவர் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணி என்பவர், கே.வி.எம்.ஆண்டவர் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவனம் நடத்தினார். அப்போது, 29 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.91 லட்சத்து 87 ஆயிரம் முதலீடு பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உரிமையாளர் மணி தலைமறைவானார்.
இவருக்கு 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம்தேதி முதல் கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (30-ம் தேதி) மாலைக்குள், மணி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அறிவிக்கப் பட்ட குற்றவாளியாக ஆணை பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள மணி குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு 0424–2256700, 94981–78566 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.