

பட்டுக்கோட்டையில் ஆற்றில் தனியார் ஆம்னி பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டியுள்ளார். பேருந்தில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஜாசிக் அகமது(21), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிமணி(21), நதியா(33), ஜெஸ்வந்தி(12), நிவேதா(23) ஆகிய 5 பேர் பயணம் செய்தனர்.
பேருந்து, பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 15 அடி உயரத்திலிருந்து நசுவினி ஆற்றுக்குள் பேருந்து விழுந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். ஓட்டுநர் மாதவன் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.