தங்கும் வசதி, உணவுக்கான நிதி உதவியை அரசு நிறுத்தியதால் - சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு மருத்துவர், செவிலியர் தவிப்பு :

தங்கும் வசதி, உணவுக்கான நிதி உதவியை அரசு நிறுத்தியதால்  -  சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு மருத்துவர், செவிலியர் தவிப்பு :
Updated on
1 min read

விடுதிகளில் தங்க ஏற்பாடு, உணவுக்கான நிதியை தமிழக அரசு நிறுத்தியதால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 230 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர 150 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஷிப்டு முறையில் தினமும் 65 மருத்துவர்கள், 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.

கரோனா வார்டில் 4 நாட்கள் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒருவாரம் ஓய்வளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் வீட்டுக்குச் சென்றால், குடும்பத்தினருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், கடந்த ஆண்டு அவர்கள் தங்க தனியார் விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், அதற்கான நிதியை தமிழக அரசு நிறுத்தி விட்டது. இதனால் இந்தாண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மருத் துவக் கல்லூரியில் உள்ள விடுதிகளிலேயே தங்க வைக்கின்றனர். அங்கு அதிகபட்சம் 60 மருத்துவர்கள் மட்டுமே தங்க முடியும். மேலும் கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்களைத் தவிர்த்து, மற்ற பிரிவுகளில் பணிபுரியும் வெளியூர் மருத்துவர் களும் அங்கு தங்குகின்றனர். இதனால் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்க இடமின்றி தவிக்கின்றனர். அதேபோல் செவிலியர்களும் தவிக்கின்றனர்.

நோயாளிகளுக்கு மட்டும் உணவு வழங்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சொந்த பணத்தில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர்.

மருத்துவர்கள் சிலர் கூறு கையில், ‘கரோனா வார்டில் பணிபுரிவோர் வீடுகளுக்குச் செல்ல முடியாது. இதனால் கடந்த ஆண்டைபோல தங்க இடம், உணவு வழங்க வேண்டும்,’ என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கும், உணவு வழங்கு வதற்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in