தினசரி 72 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

தினசரி 72 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் :  சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்
Updated on
1 min read

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி 72 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகரப் பகுதிகளில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,423 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றுக்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட 79 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தேவையான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 4,269 பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி 72 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 14 மருத்துவக் குழுவினர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக தினமும் தலா 3 பகுதிகளிலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய 16 மருத்துவக் குழுவினர் தினமும் தலா ஒரு பகுதிகளிலும், 8 மினி கிளினிக் மருத்துவக் குழுவினர் தலா மூன்று இடங்களிலும் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள், முகக் கவசம் அணியாத தனிநபர்கள் மற்றும் கரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை கண்டறிந்து விழிப்புணர்வூட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாநகர பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக முகக்கவசம் அணியாத 59 தனி நபர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 44 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும் மொத்தம் ரூ.33,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in