வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டியவை : நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஆலோசனைக்  கூட்டத்தில்  ஆட்சியர் விஷ்ணு,  காவல் ஆணையர் அன்பு பங்கேற்றனர்.                    படம்: மு.லெட்சுமி அருண்
வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் விஷ்ணு, காவல் ஆணையர் அன்பு பங்கேற்றனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் அன்பு முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் பட்டியலை புகைப்படங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம் 18ல்- அளிக்க வேண்டும். அந்த முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வேட்பாளர்களின் முகவர்கள் வரும் 2-ம் தேதி காலை 6.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். முகவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்லஅனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும்போது முகவர்களோ மற்றவர்களோ அறையிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். குடி தண்ணீர், சிற்றுண்டி, கழிவறை போன்றவற்றுக்கான அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் தினத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை அல்லது கரோனா தடுப்பூசி முதல் டோஸ் இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர் சான்றிதழ் பெறுவதற்கு வேட்பாளருடன் இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட வருவாய் அதிகாரி ஆ.பெருமாள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in