

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களை சேர்க்கக் கூடாது என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில், தொழிலாளர்களை ஈடுபடுத்துவதில், சில விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதன்படி 55 வயதுக்கு மேற்பட்டோர், நோய்வாய்ப்பட்டோரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
மேலும், சளி, காய்ச்சல், தும்மல், சுவாசக்கோளாறு, சர்க்கரை நோய், இதயக்கோளாறு உள்ளவர்களைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணிபுரியும் இடத்தில் 2 மீட்டர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பணி புரிய வேண்டும்.
புகையிலை, வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பணிபுரியும் இடத்திற்கு மொத்தமாக ஒரே வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வரக்கூடாது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் சோப்பு போட்டு கைகளைக் கழுவ ஏற்பாடு செய்து தர வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.