

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்ட அறிக்கை வழங்காததால், பொதுப்பணித்துறை அலுவலகத் தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ரூ.933.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ளது. இதில், பிரதான கரை 65.37 கி.மீ., கிளை வாய்க்கால் கரை 122 கி.மீ. தூரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணிகளைத் தொடங்கும் போது அதனைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், மே 5- ம் தேதி வரை கீழ்பவானி வாய்க்காலில் பணிகள் எதுவும் நடைபெறாது என உறுதியளிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பாக திட்ட அறிக்கையை விவசாயிகளுக்கு வழங்கவும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் வெண்டிபாளையத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு திட்ட அறிக்கை கேட்கச் சென்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், திட்ட அறிக்கையை வழங்குவதாகத் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.