பயணிகள் எண்ணிக்கை குறைவால் வருவாய் இழப்பு - ஈரோட்டில் 70 சதவீதம்தனியார் பேருந்துகள் இயக்கம் :

பயணிகள் எண்ணிக்கை குறைவால் வருவாய் இழப்பு -  ஈரோட்டில் 70 சதவீதம்தனியார் பேருந்துகள் இயக்கம் :
Updated on
1 min read

கரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளதால், ஈரோட்டில் 70 சதவீதம் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து 730 அரசுப் பேருந்துகள், உள்ளூர் மற்றும் வெளியூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் 269 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அதிகாலை முதல் இரவு 9 மணி வரை தனியார் பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் அச்சம் காரணமாக, பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது. இதனால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

இதனால் வருவாய் இழப்பைச் சந்திக்கும் பேருந்து உரிமையாளர்கள், பேருந்து இயக்கத்தை குறைத்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு, பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சம்பளம் வழங்குவதில் உள்ள சிரமம், பயணிகள் வருகை குறைவால் 70 சதவீதம் தனியார் பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பகல் நேரத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்து வருகிறது. கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர் போன்ற நகரங்களுக்கு தொழில், மருத்துவ ரீதியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தைக் காட்டிலும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in