

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ரங்கம் யாத்ரி நிவாஸில் தனிமைப்படுத்துதல் முகாம் இன்று(ஏப்.28) முதல் மீண்டும் செயல்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கென 630 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மணப்பாறை, ரங்கம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதவிர பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 160 படுக்கைகள், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 550 படுக்கைகள், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் 500 படுக்கைகள், மணப்பாறை குறிஞ்சி பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள், துறையூர் புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை- அறிவியல் கல்லூரியில் 140 படுக்கைகள், இருங்களூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 160 படுக்கைகள் என 6 இடங்களில் கரோனா தனிமைப்படுத்துதல் சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில், குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி, கீழரண்சாலை குறிஞ்சி கலை-அறிவியல் கல்லூரி, சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் கூடுதலாக 1,000 படுக்கைகளுடன் கரோனா தனிமைப்படுத்துதல் சிகிச்சை மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இதனிடையே, கடந்தாண்டைப்போலவே இந்த முறையும் திருச்சி ரங்கம் யாத்ரி நிவாஸில் 480 படுக்கைகளுடன் தனிமைப்படுத்துதல் முகாம் இன்று (ஏப்.28) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ரங்கம் சார் ஆட்சியர் விசு மகாஜன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன், துணை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.