

திருச்சி: நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரையும் நல வாரியத்தில் பதிவு செய்து, கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் வரை மாதந்தோறும் ரூ.5,000 வீதம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட நாட்டுப்புற, நாதஸ்வரம், நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகிய கலைக் குழுவின் தலைவர் ஏ.ஆர்.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தோம். கடந்தாண்டு கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரள செண்டை மேளத்தின் வருகையால் எங்களுக்கு தொழில் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளால் நிகழ்ச்சி நடத்த முடியாமல், வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இந்தத் தொழிலைத் தவிர வருவாய்க்கு வேறு வழி இல்லை. எனவே, எங்கள் தொழிலுக்கு கூடுதல் தளர்வு அளித்து, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பதுடன், நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரையும் நல வாரியத்தில் பதிவு செய்து, அனைவருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் வரை மாதந்தோறும் ரூ.5,000 வீதம் உதவித் தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனு அளிக்க வந்தவர்களில் பலர் பல்வேறு வேடங்கள் அணிந்து, மேளதாளம் முழங்க வந்தனர்.