

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மண் கடத்தல் வழக்கில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 13 பேர் மீது டிஜிபி உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சோளிங்கர் அருகே யுள்ள புலிவலம் கிராமத்தில் சார் ஆட்சியர் இளம் பகவத் மண் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது, மண் கடத்தும் நபர் சரவணன் என்பவர் தப்பியோடும்போது அவரது செல்போன் சார் ஆட்சியர் வசம் கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது அவருக்கும் முன்னாள் ராாணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராகவும் தற்போது ஈரோடு ஆவின் பொது மேலாளராக இருக்கும் முருகேசன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரி களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
மேலும், மண் கடத்தலுக்காக இவர்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் குறித்த விவரங்கள் வாட்ஸ்-அப் உரையாடலாக இருந்தது.
இது தொடர்பாக சார் ஆட்சியர் இளம்பகவத் அளித்த புகாரின்பேரில் ஆவின் பொது மேலாளர் முருகேசன் உள்ளிட்ட 19 பேர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சோளிங்கர் காவல் ஆய்வாளராக இருந்த எம்.வெங்கடேசன், சோளிங்கர் உதவி ஆய்வாளராக இருந்த மகாராஜன், பாஸ்கரன், கொண்டபாளையம் காவல் நிலைய காவலர் விஜய பாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், சோளிங்கர் தனிப்பிரிவு தலைமை காவலர் பச்சையப்பன், தலைமை காவலர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார்,பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் ராம மூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோர் சரவணனுடன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, ‘‘இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு சார்பில் தமிழக காவல் துறை தலைவருக்கு (டிஜிபி) அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் அல்லது காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்றம் உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும். காவல் துறை தலைவரின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவில் சிக்கிய புகாருக்கு உள்ளானவர்கள் மீது பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் அல்லது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.