

வேப்பனப்பள்ளி அருகே யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களையும், தோட்டங்களில் நுழைந்து வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லை வனப்பகுதியில் உள்ளது. அண்டை மாநில வன எல்லையில் உள்ள விளைநிலங்கள் மற்றும் கிராம பகுதிகளுக்குள் நுழையும்யானைகளை அம்மாநில வனத்துறையினர் வெடி வெடித்தும், விரட்டியும் தமிழக எல்லைக்குள் அடிக்கடி இடம்பெயரச் செய்கின்றனர்.
இவ்வாறு இடம் பெயரும் யானைகள் வேப்பனப் பள்ளி பகுதிக்குள் அடிக்கடி புகுந்து வனத்தையொட்டிய கிராமங்களில் முகாமிடுகின்றன. கடந்த சிலமாதங்களாக இங்குள்ள வனப் பகுதியில் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றில், 5 யானைகள் நேற்று காலை கொங்கனப்பள்ளி கிராம பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்தன. அப்போது, அப்பகுதியில் இருந்த வாழைத் தோட்டத்துக்குள் சென்ற யானைகள் வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தின.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக யானைகள் அடிக்கடி இங்குள்ள விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகளின் உழைப்பும், வருவாயையும் இழக்கும் நிலைஏற்பட்டு வருகிறது.
யானைகளை அடர்ந்த வனத்தின் உட்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் வகையில் வனத் துறையினர் உர்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.