

வட சென்னையில் ஆய்வாளர்கள் உட்பட 14 போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று தடுப்பு பணியில் முன் கள வீரர்களாக காவல் துறையினரும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை காவல் சரகத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ராயபுரம் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளர், ஒரு காவலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வட சென்னையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 14 போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வாளருக்கு, தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.